வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தில் டிரோன்களுக்கு தடை


வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தில் டிரோன்களுக்கு தடை
x

வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜவுரியில் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரில் நேரடியாகவும், பயங்கரவாதிகள் மூலமும் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் பாகிஸ்தான், சமீபகாலமாக டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் உத்தியை கையில் எடுத்திருக்கிறது.

ஜம்மு விமானப் படை நிலையத்தில் டிரோன்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் டிரோன்கள் இந்தியப் பகுதியில் ஊடுருவி வருவதால், உச்சகட்ட உஷார்நிலையில் உள்ள பாதுகாப்பு படையினர் விழிப்போடு கண்காணித்து வருகிறார்கள். தாக்குதல் மட்டுமின்றி, இந்தியப் பகுதிக்குள் ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்திவரவும் டிரோன்கள் பயன்படுத்தப்படும் நிலையில், காஷ்மீர் எல்லைப்புற மாவட்டமான ரஜவுரியில் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்மாவட்டத்தில் டிரோன்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவை இன்று வெளியிட்டுள்ள ரஜவுரி மாவட்ட மாஜிஸ்திரேட்டு ராஜேஷ்குமார் சவான், டிரோன்கள், அதுபோன்ற பொருட்களை வைத்திருப்போர் உடனடியாக அவற்றை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Next Story