போலி தடுப்பூசி முகாம்கள்? : மே. வங்காள அரசு அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவு


போலி தடுப்பூசி முகாம்கள்? : மே. வங்காள அரசு  அறிக்கை அளிக்க  மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2021 9:17 PM GMT (Updated: 30 Jun 2021 10:32 PM GMT)

மேற்கு வங்காள மாநில அரசு தலைமை செயலாளர் ஹரிகிருஷ்ண திவிவேதிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி, 

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் அதிகாரபூர்வமற்ற நபர்கள் தடுப்பூசி முகாம்களை நடத்தியதாகவும், அங்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் மூலம் முறையிட்டிருந்தார்.

இந்தநிலையில், மேற்கு வங்காள மாநில அரசு தலைமை செயலாளர் ஹரிகிருஷ்ண திவிவேதிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அனைத்து பணிகளும் ‘கோ-வின்’ வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறை ஆகும். அதில் பதிவு செய்து தடுப்பூசி போடுபவர்களுக்கு சான்றிதழ் உருவாக்கப்பட்டு விடும்.

ஆனால், சான்றிதழ் கொடுக்காததால், அந்த தடுப்பூசி முகாம்களின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் எழுகிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட மருந்து பற்றியும் சந்தேகம் எழுகிறது. ஆகவே, இதுகுறித்து மாநில அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான உண்மை நிலவர அறிக்கையை 2 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story