இந்தியாவில் 5-வது தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 July 2021 4:57 AM GMT (Updated: 1 July 2021 11:30 AM GMT)

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு ஜைடஸ் கெடிலா நிறுவனம் டி.சி.ஜி.ஐ-யிடம் மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. ஆனாலும், தடுப்பூசிக்கு பற்றாகக்குறை நிலவுவதால், 3-வது அலையைத் தவிர்ப்பது கடினம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், மாடர்னா ஆகிய 4 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப்பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது. 

இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா என்ற மருந்து நிறுவனம், தனது கண்டுபிடிப்பான ஜைகோவ்-டி (ZyCoV-D) என்ற மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டி.சி.ஜி.ஐ) அனுமதி கோரி மனு அளித்துள்ளது.

டி.என்.ஐ. தடுப்பூசி தயாரித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துவிட்டநிலையில் இந்த அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரியுள்ளது. ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5-வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். 

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெருமையும், முதல் டி.என்.ஐ. வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைக்கும். இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ்வரும், உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.

மேலும் 12 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஜைகோவி-டி பாதுகாப்பானது என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசியை தயாரிக்க முடியும் என கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story