பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?
x
தினத்தந்தி 2 July 2021 12:09 AM GMT (Updated: 2 July 2021 12:09 AM GMT)

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த 2019ம் ஆண்டு 2வது முறையாக பதவி ஏற்றது. அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும். இதன் அடிப்படையில் இன்னும் 28 பேர் வரை அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் உடன் 2 முறை ஆலோசனை நடத்தினார். இதனால், எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் என்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் பல புதிய முகங்களுக்கும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித் ஷா இருவரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story