மேற்குவங்காள சட்டசபை: பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் அமளி பாதியிலேயே உரையை நிறுத்திய கவர்னர்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 2 July 2021 12:26 PM GMT (Updated: 2 July 2021 12:26 PM GMT)

மேற்குவங்காள சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் அமளியால் கவர்னர் உரையை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்

கொல்கத்தா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் மோதல் நாடறிந்த விஷயம். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து. ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ்  வெற்றி பெற்று  மூன்றாவது முறையாக ஆட்சி பிடித்தது

மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின், மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், பா.ஜனதாவை சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முதல் மந்திரி  மம்தா மீதும் கவர்னர்  குற்றம்சாட்டினார். இதனால், கவர்னர்- மாநில அரசு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மம்தா கோரிக்கை விடுத்தார்

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  இன்று மேற்குவங்காள சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது .  முதல்நாளான இன்று கவர்னர் ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். இதற்காக சட்டசபை வந்த கவர்னரை, முதல்வர் மம்தா வரவேற்று அழைத்து சென்றார்.

கவர்னரின் உரை தொடங்கிய சிறிது நேரத்தில் பா.ஜனதா  எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்திய பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனையடுத்து தனது ல் உரையை 10 நிமிடத்தி நிறுத்திய கவர்னர், பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது: 

மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இதில் பா.ஜனதா தொண்டர்கள் கொலை செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். அதில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர். இதுகுறித்த எந்த தகவல்களும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. எனவே சட்டசபையில் பா.ஜனதா  எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை அப்படியே வாசிக்க தேவையில்லை. அந்த அறிக்கையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக எழுதி கொடுக்கப்பட்டால், அப்படியே வாசிக்க முடியுமா?

வன்முறை குறித்த விசாரணையை தன்னாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வேறு மாநிலத்தில் பதிய வேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடைபெறும் என்று கூறினார்.

Next Story