மும்பையில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் போலி தடுப்பூசி கும்பல் கைவரிசை


மும்பையில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் போலி தடுப்பூசி கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 3 July 2021 2:05 AM GMT (Updated: 3 July 2021 2:05 AM GMT)

மும்பை அந்தேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், போலி தடுப்பூசி கும்பலால் சுமார் 1,000 பேர் ஏமாற்றப்பட்டனர்.

மும்பை,

மும்பை காந்திவிலி பகுதியில் உள்ள ஹிரானந்தானி கட்டிடத்தில் குடியிருப்புவாசிகளுக்கு போலி கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கும்பல் நகரில் 9 இடங்களில் போலி தடுப்பூசி முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் இந்த கும்பல் மேலும் ஒரு இடத்தில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்து உள்ளது. அந்தேரியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 1,055 பேருக்கு மோசடி கும்பல் போலி தடுப்பூசி போட்டு உள்ளது. மேலும் இதற்காக அந்த கும்பல் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.60 லட்சத்தை வாங்கி உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களில் 48 பேருக்கு மட்டுமே அதற்கான சான்றிதழை கொடுத்து உள்ளனர்.

இதுகுறித்து தனியார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் முக்கிய குற்றவாளிகளான மனிஷ் திரிபாதி, அர்விந்த் ஜாதவ், பவான் சிங், அனுராக் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் டாக்டர் மனிஷ் திரிபாதி உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். போலி கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மும்பையில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story