கொச்சியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்ற உத்தரவு


கொச்சியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்ற உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2021 4:42 AM GMT (Updated: 3 July 2021 4:42 AM GMT)

கொச்சியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்ற லட்சத்தீவு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கவரத்தி,

நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதன் பிறகு அவர் மேற்கொண்ட சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் லட்சத்தீவு நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வித்துறை அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.  

இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக ஏற்கனவே நிர்வாக தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் லட்சத்தீவின் கவரத்தி அலுவலகத்திற்கு வருமாறு லட்சத்தீவு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அலுவலகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் கவரத்திக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லட்சத்தீவு நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் கேரளாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் லட்சத்தீவைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story