உத்தரபிரதேசத்தில் 2 பெண்களுக்கு தடுப்பூசி போடாமல் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டதால் அதிர்ச்சி


உத்தரபிரதேசத்தில் 2 பெண்களுக்கு தடுப்பூசி போடாமல் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டதால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 3 July 2021 6:22 PM GMT (Updated: 3 July 2021 6:22 PM GMT)

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த மிரிதுளா மங்களம் (வயது 25) என்ற இளம்பெண் கடந்த மாதம் 18-ந்தேதி அங்குள்ள சமூக நல மையம் ஒன்றில் 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அன்று பலத்த மழை பெய்ததால் மையத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை.

ஆனால் அவர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு விட்டதாக மிரிதுளாவுக்கு சான்றிதழ் வந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிரிதுளா மருத்துவ அதிகாரிகளிடம் தொலைபேசியில் விசாரித்தார். அப்போது மனித தவறால் அந்த சம்பவம் நடந்து விட்டதாகவும், தடுப்பூசி மையத்துக்கு நேரில் வந்து அந்த 2-வது டோசை போட்டுக்கொள்ளுமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஏற்கனவே தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் பெறப்பட்டதால், அவரால் மீண்டும் தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியவில்லை. எனவே மருத்துவ அதிகாரிகளின் அறிவுரைப்படி வேறொரு எண்ணில் புதிதாக முன்பதிவு செய்து தடுப்பூசி போடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.இதைப்போல மாவ் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான உம்தா ராய் என்ற பெண்ணும் முதல் டோஸ் தடுப்பூசி போட முன்பதிவு செய்துவிட்டு, காய்ச்சல் காரணமாக செல்லவில்லை. அவருக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வந்து விட்டது.

இது குறித்து விசாரித்தபோது, தொழில்நுட்ப தவறு காரணமாக இது நடந்திருப்பதாகவும், இதுகுறித்து எழுத்துப்பூர்வ விண்ணப்பம் அளித்தால் உம்தாவுக்கு தடுப்பூசி போட முடியும் எனவும் அதிகாரிகள் விளக்கினர். அதன்படி அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பூசி போடாமலே சான்றிதழ் பெறப்பட்ட விவகாரம் உத்தரபிரதேச மருத்துவ அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story