பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு


பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 3 July 2021 7:19 PM GMT (Updated: 3 July 2021 7:19 PM GMT)

எல்லாவற்றையும் அரசால் இலவசமாக கொடுக்க முடியாது, பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

ஐகோர்ட்டில் மனு
பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள் தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில், மும்பையில் உள்ள பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மாநகராட்சி தினந்தோறும் 3 வேளையும் சத்தான உணவு, சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும், தங்கும் இடம் கொடுக்க வேண்டும், தூய்மையான 
பொது கழிவறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு குறித்து ஐகோர்ட்டில் பதில் அளித்த மாநகராட்சி, தொண்டு நிறுவனங்கள் நகரில் உள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதாக கூறியது. மாநகராட்சியின் இந்த தகவலை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் மேலும் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தேவையில்லை என கூறியது.

எல்லோரும் உழைக்கிறார்கள்
மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி கூறுகையில், " அவர்களும் (பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள்) கண்டிப்பாக நாட்டுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் உழைக்கிறார்கள். எல்லாவற்றையும் மாநில அரசால் வழங்க முடியாது. நீங்கள் (மனுதாரர்) இவர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள்" 
என்றனர். அதே நேரத்தில் வீடு இல்லாதவர்கள் பொது கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story