டெல்லியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா: பாதிப்பு விகிதம் 0.13 சதவீதமாக சரிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 July 2021 10:28 AM GMT (Updated: 4 July 2021 11:02 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,34,554 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,995 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,08,567 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 992 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே டெல்லியில் விளையாட்டு வசதிகள் சாதாரணமாக இயங்க அனுமதிக்கும் உத்தரவுகளை இன்று மாநில அரசு வெளியிட்டது. இதுதொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், அடுத்த கட்ட திறப்பின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள அரங்கங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் திங்கள்கிழமை முதல் பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், சினிமா அரங்குகள், தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ், விருந்து அரங்குகள், ஆடிட்டோரியங்கள், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள் டெல்லியின் என்.சி.டி முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

Next Story