சுப்ரீம் கோர்ட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு


சுப்ரீம் கோர்ட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 5 July 2021 8:02 PM GMT (Updated: 5 July 2021 8:02 PM GMT)

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட சட்டப் பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிர்ச்சியையும், வேதனையையும் வெளியிட்டுள்ளது.

ஷ்ரேயா சிங்கால் வழக்கு
ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு கருத்துரிமைக்கு எதிராக உள்ளது என தெரிவித்து அதை ரத்து செய்து கடந்த 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.ஆனாலும் அந்தப் பிரிவின்கீழ் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) தேசிய பொதுச் செயலாளரான சென்னையைச் 
சேர்ந்த வி.சுரேஷ் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் பாரிக் ஆஜராகி, செல்லாது என அறிவிக்கப்பட்ட சட்டப் பிரிவின்கீழ் 11 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 745 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமலாவது உறுதி செய்யப்பட வேண்டும் என 
வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.

அதிர்ச்சி, வேதனை
அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவை செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது, அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கவனிக்காமல் போலீசார் இந்த சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் மிகவும் அதிர்ச்சியும், 
வேதனையும் அளிக்கிறது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story