நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 5 July 2021 8:26 PM GMT (Updated: 5 July 2021 8:26 PM GMT)

நாடாளுமன்றம், சட்டசபைகளில் அதிகரிக்கும் அமளி சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

புதுடெல்லி, 

கேரள சட்டப்பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளரின் புகாரின் பெயரில் 6 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை திரும்பப்பெறக்கோரி அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் கடந்த மார்ச் 12-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது கேரள ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜித் உள்ளிட்ட 6 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவையில் எம்.எல்.ஏ.க்கள் மைக்கை பிடுங்கி எறிந்து, பொது சொத்துகளை நாசப்படுத்தும் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த செயல்கள் மூலம் தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன? சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தடைகளை ஏற்படுத்திய எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றுவதில் என்ன பொதுநலன் இருக்கிறது? இந்த விவகாரத்தை கடுமையாக கையாள வேண்டியுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் அதிகரித்து வருகின்றன. அவையில் உறுப்பினர்கள் நாகரிக அமைதி காப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றமும், சட்டசபையும் நமது ஜனநாயகத்தை காப்பவை என்றனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story