ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் ஒரே நகரம் மும்பை; மாநகராட்சி மீது மும்பை ஐகோர்ட்டு தாக்கு


ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் ஒரே நகரம் மும்பை; மாநகராட்சி மீது மும்பை ஐகோர்ட்டு தாக்கு
x
தினத்தந்தி 5 July 2021 9:15 PM GMT (Updated: 5 July 2021 9:15 PM GMT)

ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் ஒரே நகரம் மும்பை மாநகராட்சி தான் என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மால்வானி கட்டிட விபத்து
தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த ஆண்டு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த வழக்கை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இந்த நிலையில் கடந்த மாதம் மும்பை புறநகர் பகுதியான மால்வானியில கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் மாடிகள்
அப்போது மால்வானியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில், “அரசால் ஒதுக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் முதலில் தரைதளம் மற்றும் ஒரு மாடி கட்டவே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டவிரோதமாக அங்கு கூடுதல் மாடிகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் அசல் ஒதுக்கீட்டாளர் இதுவரை கண்டறியப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான மூத்த வக்கில் அஜ்பி சியோனி கூறுகையில், “குடிசைப்பகுதிகளில ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டிடங்களில் இதுபோன்ற சட்டவிரோத கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

அனுமதிக்க முடியாது...
மும்பையில் மட்டும் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்தால் அதற்கு பதிலாக இலவசமாக வீடுகள் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்தில் சிங்கப்பூர் மாதிரியிலிருந்து மாநில அரசு கற்றுக்கொள்ள முடியும். நிலைமை தற்போது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது. ஆனால் மக்கள் பலியாவதை அனுமதிக்கும் கொள்கைகள் நம்மிடம் இருக்க கூடாது. நாம் மனித வாழ்க்கையை மதிக்க வேண்டும்.மக்கள் தங்களுக்கு தங்க வேறு இடம் இல்லை என கூறும் ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டவிரோத கட்டமைப்புகளில் தங்க அனுமதிக்க முடியாது. தற்போதைய மால்வானி கட்டிட விபத்து வழக்கில் அசல் ஒதுக்கீட்டாளர் யார் என்பதை கண்டறிய எந்த ஆவணமும் இல்லை. சரிபார்க்க எந்த வழிமுறையும் இல்லை. இது முழுமையான பேராசையால் நடந்த சம்பவம்.

வாடகைக்கு விட்டு...
அசல் ஒதுக்கீட்டாளர் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்ததற்காக இலவசமாக தரைதள வீட்டை பெற்றார். பின்னர் சட்டவிரோதமாக மேலும் தளங்களை கட்டி பேராசைக்கு ஏற்ப அவற்றை வாடைக்கு விட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளார்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்றும்(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என தெரிகிறது.குடிசை மறுவாழ்வு விதிகளின்படி, 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகிறார்கள், இலவச மறுவாழ்வு இல்லம் இல்லாமல் அவர்கனை அப்புறப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story