காஷ்மீருக்கு சென்றுள்ள தொகுதி மறுவரையறை குழுவை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சி மறுப்பு


காஷ்மீருக்கு சென்றுள்ள தொகுதி மறுவரையறை குழுவை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சி மறுப்பு
x
தினத்தந்தி 6 July 2021 5:57 PM GMT (Updated: 6 July 2021 5:57 PM GMT)

சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக காஷ்மீருக்கு சென்றுள்ள தொகுதி மறுவரையறை குழுவை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சி மறுத்து விட்டது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி சந்தித்தது.

மீண்டும் மாநில அந்தஸ்து

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை காஷ்மீர் என்றும், லடாக் என்றும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள், ‘குப்கர் கூட்டணி’ என்ற பெயரில் ஒரே அணியாக சேர்ந்துள்ளன.கடந்த மாதம் 24-ந் தேதி, பிரதமர் ேமாடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் குப்கர் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.அந்த கூட்டத்தில், காஷ்மீரில் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிந்தவுடன், மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது பற்றியும், தேர்தல் நடத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரிகிறது.

தேசிய மாநாட்டு கட்சி

தொகுதி மறுவரையறை பணியை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு 4 நாள் பயணமாக காஷ்மீருக்கு சென்றுள்ளது.தங்கள் யோசனைகளை தெரிவிக்க முன்வருமாறு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 20 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு நேற்று மாலை 5.10 மணி முதல் 5.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டது. தேசிய மாநாட்டு கட்சி நியமித்த 5 பேர் குழு, ஸ்ரீநகரில் ஓட்டலில் தங்கியுள்ள தொகுதி மறுவரையறை குழுவினரை சந்தித்து தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் முன்வைத்தது.

குழுவுக்கு கடிதம்

ஆனால், முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, தொகுதி வரையறை குழுவை சந்திக்க மறுத்துவிட்டது.

 இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் குலாம்நபி ேலான் ஹஞ்சுரா, நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொகுதி மறுவரையறை குழுவுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. மற்ற மாநிலங்களில் தொகுதி மறுவரையறை பணி, 2026-ம் ஆண்டுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் மட்டும் அப்பணி நடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இக்குழு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவையே கூறப்போவதாக நம்பப்படுகிறது. அது மக்கள் நலனுக்கு மேலும் தீங்காகவே அமையும். எனவே, இந்த குழுவை நாங்கள் புறக்கணிக்கிறோம். தொகுதி மறுவரையறை பணியில் பங்கேற்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story