பணமோசடி : தேசியவாத காங்கிரஸ் தலைவர் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்தது


பணமோசடி : தேசியவாத காங்கிரஸ் தலைவர் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்தது
x
தினத்தந்தி 7 July 2021 6:15 AM GMT (Updated: 7 July 2021 6:15 AM GMT)

பணமோசடி வழக்கு ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சேயின் மருமகனை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.

மும்பை

மராட்டிய மாநிலம் புனேவில் 2016 ஆம் ஆண்டு நில ஒப்பந்தம் தொடர்பான வழக்கு  ஒன்றில் முன்னாள் அமைச்சரும்   தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சேயின் மருமகன் கிரிஷ் சவுத்ரியை அமலாக்க துறை இன்று கைது செய்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக 2020 டிசம்பரில், பா.ஜனதாவில் இருந்து விலகி காட்சே தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார்.

புனேவுக்கு அருகிலுள்ள போசாரியில் அரசு நிலம் வாங்குவதற்கு  தனது  அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட காட்சே, 2016 ல் அப்போதைய தேவேந்திர பட்னாவிஸ்  அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில், மராட்டிய  ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) காட்சே, அவரது மனைவி மந்தாகினி, சவுத்ரி மற்றும் உண்மையான நில உரிமையாளர் அப்பாஸ் அகானி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேற்று இரவு வரை சவுத்ரியிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ்  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

Next Story