ஐ.ஐ.டி. இயக்குனர்களுடன் நரேந்திர மோடி உரையாடல்


ஐ.ஐ.டி. இயக்குனர்களுடன் நரேந்திர மோடி உரையாடல்
x
தினத்தந்தி 8 July 2021 11:24 PM GMT (Updated: 8 July 2021 11:24 PM GMT)

ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, மாறிவரும் சூழலுக்கேற்ப தொழில் நுட்ப கல்வியை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தினார்.

சென்னை ஐ.ஐ.டி.
பிரதமர் மோடி நேற்று மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஐ.ஐ.டி.கள், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன், மும்பை ஐ.ஐ.டி. இயக்குனர் சுபாஷிஸ் சவுத்ரி உள்ளிட்டோா் தற்போதைய கல்விப்பணிகள், ஆராய்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

பாராட்டு

அவர்களிடையே பிரதமா் மோடி பேசியதாவது:-

எதிர்வரும் பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கும். கொரோனா உருவாக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகள் பாராட்டுக்கு உரியவை.கல்வி, சுகாதாரம், வேளாண்மை, பாதுகாப்பு, இணைய தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எதிர்காலத்துக்கான தீர்வுகளை உருவாக்குவதில் இவை கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், மாறிவரும் சூழல் மற்றும் சவாலுக்கேற்ப தொழில்நுட்ப கல்வியை மாற்றியமைக்க வேண்டும்.

இந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வி
4-வது தொழில் புரட்சியை மனதில்கொண்டு, இளைஞர்களை மாற்றங்களுக்கு தயார்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. உயர்கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம். நல்ல தரமான கல்வியையும் அளிக்க முடியும்.தொழில்நுட்ப கல்வியை இந்திய மொழிகளில் கொண்டு வர வேண்டும். சர்வதேச பத்திரிகைகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story