மோடி அரசால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது: நானா படோலே


மோடி அரசால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது: நானா படோலே
x
தினத்தந்தி 9 July 2021 11:25 PM GMT (Updated: 9 July 2021 11:25 PM GMT)

மோடி அரசால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. யின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே நேற்று புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலம் தழுவிய போராட்டம்
விலைவாசி உயர்வு மற்றும் மோடி அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த போராட்டம் வருகிற 17-ந் தேதி வரை நடைபெறும்.வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக 3 சட்டத்தை கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் உள்ளிட்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. அவர்களின் கருத்துக்கள் கிடைத்துடன் சிறப்பு சட்டசபை தொடர் கூட்டப்பட்டு அந்த சட்டங்கள் நிறைவேற்றப்படும். அப்போது எங்களால் சபாநாயகர் தேர்தலை நடத்த 
முடியும்.

கூட்டுறவு துறையை அழிக்க மந்திரி
மோடி அரசு நாட்டை விற்க தயாராகிவிட்டது. பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகிவிட்டது. மத்திய கூட்டுறவு துறை என்ன செய்யும் என என்னால் கருத்து கூற முடியாது. கூட்டுறவு துறையின் மந்திரியாக (அமித்ஷா) நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை மந்திரியாக நியமித்து இருப்பது கூட்டுறவு துறையை அழிவுபாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கலாம். நேரம் தான் அவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்ல வேண்டும்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை
மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முகுல் ராய்க்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவர் பா.ஜனதாவில் இணைந்தவுடன் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றம் அற்றவர் என அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் நாட்டின் பெரிய விசாரணை முகமைகள் ஆகும். ஆனால் பா.ஜனதாவும், மோடி அரசும் சேர்ந்து அதை முக்கியத்துவம் அற்றதாக ஆக்கிவிட்டனர். யாரும் தற்போது அவர்களை கண்டுகொள்வதில்லை. மத்திய அரசால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யின் 
முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story