உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்


உத்தரபிரதேசம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு கட்சியினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 10 July 2021 9:11 AM GMT (Updated: 10 July 2021 9:13 AM GMT)

உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 825 இடங்களுக்கான பிளாக் பஞ்சாயத்து தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 825 இடங்களில் போட்டியிட 1778 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இதில் 68 பேரின் மனுக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளது. 187 பேர் தங்கள்  மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், எதிர்த்து யாரும் போட்டியிடாததால் 349 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

எஞ்சிய 476 பிளாக் பஞ்சாயத்துகளின் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அம்மாநிலத்தின் ஹமீர்பூரில் உள்ள சுமீர்பூர் பகுதியில் வாக்குப்பதிவு நிலையம் அருகே பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் இடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. 

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கல் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான மனுதாக்கலின் போது 13 இடங்களில் வன்முறை நடைபெற்றது. நேற்றுமுன் தினம் சமாஜ்வாதி கட்சி பெண் தொண்டர் ஒருவரை சேலை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Next Story