கொரோனா இன்னும் ஓயவில்லை: சுற்றுலாப்பயணிகளுக்கு இமாசல பிரதேச முதல் மந்திரி அறிவுறுத்தல்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 10 July 2021 9:55 AM GMT (Updated: 10 July 2021 9:55 AM GMT)

இமாசல பிரதேசம் வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

சிம்லா,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா அதன்பிறகு  கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது சராசரியாக 40 ஆயிரத்திற்கும் சற்று அதிகமாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திய மாநில அரசுகள், தற்போது தளர்த்தியுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், மலைவாசஸ்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதும் நிலை காணப்படுகிறது. 

அந்த வகையில், இமாசல பிரதேசத்திலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அம்மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகூர் கூறியதாவது:- சுற்றுலாப்பயணிகள் வரும் எண்ணிக்கை எங்களுக்கு கவலை அளிக்கிறது. சுற்றுலாப்பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம். 

ஆனால், அவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். எங்களின் சுற்றுலாத்துறையையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது. கொரோனா இன்னும் ஓயவில்லை. எனவே, ஓட்டல்கள்  நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்றார். 


Next Story