கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்: அமித்ஷா


கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்: அமித்ஷா
x
தினத்தந்தி 10 July 2021 10:44 PM GMT (Updated: 10 July 2021 10:44 PM GMT)

அனைத்து கூட்டுறவு அமைப்புகளையும் அதிக அதிகாரம் கொண்டவையாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, தன்னை சந்தித்த கூட்டுறவுத்துறை தலைவர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.

தனி அமைச்சகம்
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் கூட்டுறவு துறை இயங்கி வந்தது. அதை பிரித்து, தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக கூட்டுறவு அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இலாகா பொறுப்புகளை அமித்ஷா இன்னும் முறைப்படி ஏற்கவில்லை. இந்தநிலையில், கூட்டுறவு துறையின் முக்கிய நிர்வாகிகள் நேற்று அவரை சந்தித்தனர்.தேசிய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திலீப் சங்கானி, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தின் (இப்கோ) தலைவர் நகாய், நிர்வாக இயக்குனர் அவஸ்தி, தேசிய விவசாய கூட்டுறவு 
வாணிப கூட்டமைப்பின் (நபெட்) தலைவர் பிஜேந்தர்சிங் ஆகியோர் சந்தித்தனர். கூட்டுறவு துறை சந்தித்து வரும் சவால்களையும், பிரச்சினைகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

இயற்கை விவசாயம்

அவர்களிடையே அமித்ஷா கூறியதாவது:-

அனைத்து கூட்டுறவு அமைப்புகளையும் அதிக அதிகாரமுள்ளதாக மாற்ற மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. அதுபோல், கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பலன்கள், கீழ்மட்டத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளையும் சென்றடையும்.‘இப்கோ’ போன்ற கூட்டுறவு அமைப்புகள், மாநில அளவிலான கூட்டுறவு அமைப்புகளுடன் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் கூட்டுறவு இயக்கம் சந்திக்கும் பிரச்சினைகளை விவாதிக்கலாம்.வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அளிக்கப்படும் அதே சலுகைகளும், பலன்களும் தொடக்க வேளாண் கூட்டுறவு அமைப்புகளுக்கும் வழங்கப்படும். காலியாக உள்ள 38 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விதை உற்பத்தி பணியிலும், இயற்கை விவசாயத்திலும் ‘இப்கோ’ போன்ற கூட்டுறவு அமைப்புகள் ஈடுபட 
வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story