வேளாண் துறைக்கு, ‘அறுவடைக்கு பிந்தைய புரட்சி’ தேவை: பிரதமர் மோடி


வேளாண் துறைக்கு, ‘அறுவடைக்கு பிந்தைய புரட்சி’ தேவை: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 July 2021 11:40 PM GMT (Updated: 12 July 2021 11:40 PM GMT)

வேளாண் துறைக்கு அறுவடைக்கு பிந்தைய புரட்சி தேவைப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி உரை
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் நிறுவன தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்த வங்கி சார்பில் மும்பையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பிரதமர் மோடி சிறப்பு செய்தி அனுப்பி இருந்தார். அவரது உரை நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.

அதில் பிரதமர் மோடி கூறியிருந்ததாவது:-

உற்பத்தியில் சாதனை
கொரோனா காரணமாக வரலாறு காணாத சவால்கள் இருந்தபோதும், கடின உழைப்புக்கு பேர் போன நமது விவசாயிகள் விளைபொருள் உற்பத்தியில் சாதனை அளவை எட்டியுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாய உற்பத்தியுடன், அறுவடைக்கு பிந்தைய புரட்சியும், மதிப்பு கூட்டுதலும் வேளாண் துறைக்கு தேவைப்படுகிறது.இதை அடைவதற்காக நமது வேகத்தையும், அளவையும் தீவிரப்படுத்த நாங்கள் இடைவிடாமல் முயற்சி செய்கிறோம். நீர்ப்பாசனம் முதல் விதைப்பு, அறுவடை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வருவாய் வரை முழுமையான தீர்வைப் பெற விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்

ஸ்டார்ட்-அப் திட்டங்கள்
வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்-அப் திட்டங்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.அறிவியல் சார்ந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும், கிராமங்களின் விருப்பங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், முழுமையான அணுகுமுறையின் மூலம் விவசாயத்துறை பொருளாதாரத்தை மாற்றுவதற்கும் உத்வேகம் அளித்து வருகிறோம்.

தற்சார்பு இந்தியா
தற்சார்பு இந்தியா அல்லது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்துக்கு ஒரு சுயசார்பு மிக்க கிராமப்புற பொருளாதாரம் தேவையாகும். இதற்காக கடந்த 7 ஆண்டுகளாக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.12 கோடி சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் உந்து சக்தியாக அவர்கள் மாற உதவுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.


Next Story