மராட்டிய மாநிலத்தில் கொரோனா பிரச்சினையால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க பணிக்குழு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டிய மாநிலத்தில் கொரோனா பிரச்சினையால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க பணிக்குழு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2021 12:10 AM GMT (Updated: 13 July 2021 12:10 AM GMT)

கொரோனா பிரச்சினையால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க பணிக்குழு அமைக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

3-வது அலை
கொரோனா முதல் அலையால் நாடு முழுவதும் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. 2-வது அலையின் போதும் தொழில்துறை பிரச்சினைகளை சந்தித்தது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள், ஆலைகள் இயங்க தொடங்கி உள்ளன.இந்தநிலையில்கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குழு அமைக்கப்படும்
இதன் ஒருபகுதியாக கொரோனா பரவலால் தொழில்துறை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு பணிக்குழுவை அமைக்க உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று காணொலி காட்சி மூலம் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் அபாயம் இன்னும் உள்ளது. எனவே மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பணிக்குழு உடனடியாக அமைக்கப்படும். இந்த பணிக்குழு முதல்-மந்திரி அலுவலகம் கண்காணிப்பில் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை
இதேபோல கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆக்சிஜன் உற்பத்தி, 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதேபோல கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் உற்பத்தி பாதிக்கப்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

மேலும் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் இடத்திலேயே தங்கும் வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்-மந்திரி ஆலோசனை நடத்தினார்.

Next Story