கொரோனா: 4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு; ஆராய்ச்சி முடிவு


கொரோனா:  4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு; ஆராய்ச்சி முடிவு
x
தினத்தந்தி 13 July 2021 5:20 AM GMT (Updated: 13 July 2021 5:20 AM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட கூடும் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.



புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2வது அலை முதல் அலையை விட அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பின்னர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட தொடங்கியது.  தொடர்ந்து வெள்ளை, மஞ்சள் மற்றும் பச்சை பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அவர்களுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்து சிகிச்சைகளால் உடல் பலவீனம் அடைந்து அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தன.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளால் இதய தசை வீக்கம், இதய தசை இறப்பு, இதய செயல் இழப்பு, ரத்த குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன என ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவித்து உள்ளது.

இதற்கான அறிகுறிகள் மார்பு வலி, தலை சுற்றல், படபடப்பு, புதிதாக வரும் மூச்சு திணறல், சோர்வு ஆகும். இவைகளில் ஏதேனும் அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு தென்பட்டால் பெரும்பாலும் அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகமாக புரதசத்து உணவுகளும், நீர்ச்சத்து உணவுகளும் சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் சீராக செயல்பட வைக்கும். சத்தான பழ வகைகளையும் சாப்பிட்டு, உரிய சிகிச்சை பெற்று, உடல் வலிமை பெற்று இதய நோயில் இருந்து விடுபடலாம்.

கொரோனா தொற்றால் இதயம் கடுமையான பாதிக்கப்படுகிறது. வைரஸ் இதயத்தின் தசை செல்களை நேரடியாக பாதிப்பதால் அவற்றின் சுருங்கி விரியும் தன்மை இழந்து, இதயம் பலவீனமடைகியது.  மாரடைப்பு மிக முக்கியமான பாதிப்பு. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதும் ஏற்படுகிறது.

இது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும்பொழுது 50 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படுகிறது என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.  அவற்றில் 40 சதவீத நோயாளிகள் உயிர் இழக்கின்றனர்.


Next Story