கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 21 ஆக உயர்வு; சுகாதார மந்திரி உறுதி


கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 21 ஆக உயர்வு; சுகாதார மந்திரி உறுதி
x
தினத்தந்தி 13 July 2021 8:26 AM GMT (Updated: 13 July 2021 8:26 AM GMT)

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்து உள்ளது என சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.



திருவனந்தபுரம்,

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாடசாலை பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அடுத்த நாள் மேலும் 14 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதியானது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தினர் என கூறப்படுகிறது.

இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று வரை 19 ஆக உயர்ந்து இருந்தது.  இந்த நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்து உள்ளது என சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் இன்று உறுதி செய்துள்ளார்.

அவர் கூறும்போது, கேரளாவில் கூடுதலாக 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  அவர்களில் ஒருவர் 35 வயதுடைய பூந்துறை பகுதியை சேர்ந்தவர்.  மற்றொருவர் 41 வயதுடைய சாஸ்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.


Next Story