மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஆலோசனை


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 15 July 2021 12:56 AM GMT (Updated: 15 July 2021 12:56 AM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல் - மந்திரி எடியூரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அணை கட்ட அனுமதி கேட்டு கர்நாடக அரசு சார்பில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பிரதமரை சந்திக்க டெல்லி விரைகிறார்கள். மேலும் புதுச்சேரி சார்பிலும் மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இப்படி 3 மாநிலங்கள் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என மத்திய அரசு தரப்பில் கருதப்படுகிறது.

இதனால் எந்த மாநிலமும் பாதிக்காத வகையிலான தீர்வை மேகதாது அணை விவகாரத்தில் எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எனவே காவிரியோடு தொடர்புடைய தமிழகம், கர்நாடகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநில முதல்-மந்திரிகளுடனும் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 4 மாநில முதல்-மந்திரிகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.

Next Story