தனியார் மையங்கள் தடுப்பூசி பெற வசதி செய்ய வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


தனியார் மையங்கள் தடுப்பூசி பெற வசதி செய்ய வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2021 2:53 AM GMT (Updated: 15 July 2021 2:53 AM GMT)

தனியார் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி பெறுவதற்கு வசதிகளை செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, மராட்டியம், குஜராத், மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த நோய் எதிர்ப்புத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாரத் பயோடெக், சீரம் போன்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தடுப்பூசி போடும் பணிகளில் கவலைக்குரிய அம்சங்கள் குறிப்பாக தனியார் தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசி ஆர்டர் செய்வதில் தாமதம், பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கட்டணம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தனியார் மையங்களுக்கான தடுப்பூசி ஆர்டர்களை திரட்டலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கு மற்றும் விரைவான அனுப்புதலில் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் பங்கு போன்றவை கூட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய பூஷண், பல தனியார் தடுப்பூசி மையங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவுக்கான எந்த ஆர்டரையும் வழங்கவில்லை எனக்கூறினார். எனவே தனியார் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி பெறுவதற்கான வசதிகளை மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் தனியார் தடுப்பூசி மையங்களின் பணிகளை தினசரி அடிப்படையில் மாநில அரசுகள் ஆய்வு செய்து, தேவை மற்றும் ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவு போன்றவற்றின் அடிப்படையில் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம் பல இடங்களில் தடுப்பூசிகளை மாநில அரசுகளின் மூலம் பெற்றுக்கொண்டாலும், அவற்றுக்கான கட்டணம் செலுத்தப்படுவதில்லை எனக்கூறிய பூஷண், பெறப்பட்ட தடுப்பூசிகளுக்கான கட்டணத்தை செலுத்துவதை மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தனியார் தடுப்பூசி மையங்கள் மூலம் நடைபெறும் தடுப்பூசி போடும் பணிகள் மந்தமாக இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தில் தனியார் தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்து தடைகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

Next Story