ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு


ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
x
தினத்தந்தி 15 July 2021 3:26 AM GMT (Updated: 15 July 2021 3:26 AM GMT)

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக 16-ந் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17-ந் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story