இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வருகை


இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வருகை
x
தினத்தந்தி 16 July 2021 2:53 PM GMT (Updated: 2021-07-16T20:23:49+05:30)

இந்திய கடற்படையுடன் போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது.

26-ந்தேதி முதல் பயிற்சி

சுதந்திரமான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இங்கிலாந்துக்கு இருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அந்த நாட்டின் மிகப்பெரிய விமானந்தாக்கி போர்க்கப்பலான எச்.எம்.எஸ். குயின் எலிசபெத், 40 நாடு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாயை கடந்து அந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இங்கு இந்திய கடற்படையுடன் மிகப்பெரிய போர் பயிற்சியில் அது ஈடுபடுகிறது. இந்த பயிற்சி வருகிற 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதிய சகாப்தம்

குயின் எலிசபெத் போர்க்கப்பலின் இந்த பயணம் குறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டோமினிக் ராப் கூறுகையில், ‘இந்தியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதை இந்த பயணம் காட்டுகிறது. 40 நாடுகள் மற்றும் எங்கள் கூட்டாளிகளை சந்திப்பதன் மூலம் ஜனநாயக மதிப்பீடுகள், புதிய வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுதல் மற்றும் பரந்துபட்ட அச்சுறுத்தல்களை இணைந்து எதிர்கொள்வது போன்றவற்றுக்கு இங்கிலாந்து துணையிருப்பதை உறுதி செய்கிறது’ என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய தரைக்கடல் பகுதியில் பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியாவை நோக்கி இந்திய பெருங்கடல் பகுதியில் குயின் எலிசபெத் நுழைந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல்களுடன் தொடர் பயிற்சிகளை இது மேற்கொள்ளும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மிகப்பெரும் தருணம்

இந்த நடவடிக்கைகளை இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் மிகப்பெரும் தருணம் என வர்ணித்துள்ள இங்கிலாந்து ராணுவ மந்திரி பென் வாலஸ், இந்தியாவுடன் ஏற்கனவே இருக்கும் வலுவான நட்புறவை இது மேலும் வலுவாக்கும் எனவும் கூறியுள்ளார். 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும்போது, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அதற்கான இங்கிலாந்தின் நீடித்த அர்ப்பணிப்பு, தற்போதுள்ள எங்கள் கூட்டணிகளை வலுப்படுத்துவது மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவது ஆகியவற்றை இந்த பயணம் விளக்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

நீர்மூழ்கி கப்பல்

குயின் எலிசபெத் போர்க்கப்பலில் தாக்குதல் ரக விமானங்கள் தொகுப்பு அடங்கியுள்ளது. அத்துடன் இங்கிலாந்தின் ராயல் கடற்படைக்கு சொந்தமான 6 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும் 14 கடற்படை ஹெலிகாப்டர்கள் என பெரிய குழு ஒன்றே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story