2 நாள் ஏற்றத்துக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்குள் வந்தது - 24 மணி நேரத்தில் 542 பேர் பலி


2 நாள் ஏற்றத்துக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்குள் வந்தது - 24 மணி நேரத்தில் 542 பேர் பலி
x
தினத்தந்தி 16 July 2021 6:13 PM GMT (Updated: 2021-07-16T23:43:34+05:30)

2 நாள் ஏற்றத்துக்கு பின்னர் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. 24 மணி நேரத்தில் 542 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 13-ந் தேதி தினசரி பாதிப்பு 31 ஆயிரத்து 443 ஆக இருந்தது. ஆனால் 14, 15-ந் தேதிகளில் தினசரி பாதிப்பு உயர்ந்து முறையே 38 ஆயிரத்து 792, 41 ஆயிரத்து 806 என பதிவானது.

இந்த நிலையில் 2 நாள் ஏற்றத்துக்குப் பின்னர் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்குள் (சரியாக 38 ஆயிரத்து 949) வந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 3 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 829 ஆக உயர்ந்தது.

கேரளாவில் அதிகபட்சம் 13 ஆயிரத்து 773 பேரை கொரோனா பாதித்துள்ளது. நேற்றைய பாதிப்பில் 74.01 சதவீதத்தினரை கேரளா, மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய 5 மாநிலங்கள் கொண்டுள்ளன. கேரளாவில் மட்டுமே பாதிப்பு 35.36 சதவீத பங்கை பெற்றிருக்கிறது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 19 லட்சத்து 55 ஆயிரத்து 910 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன் பாதிப்பு விகிதம் 1.99 சதவீதம்தான். தொடர்ந்து 25-வது நாளாக இது 3 சதவீதத்துக்குள் அடங்கி உள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதம் 2.14 சதவீதம் ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் 581 பேர் பலியாகினர். நேற்று இது மேலும் குறைந்து 542 ஆக பதிவாகி உள்ளது. இதனால் இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.33 சதவீதமாக நீடிக்கிறது.

நேற்று மராட்டியத்தில் 170 பேர் அதிகபட்சமாக பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் கேரளாவில் 87 பேர் இறந்துள்ளனர். இருந்தபோதும் அந்தமான் நிகோபார், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன்டையு, குஜராத், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, நாகலாந்து, ராஜஸ்தான் ஆகிய 9 மாநிலங்களிலும், யூனியன்பிரதேசங்களிலும் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொரோனா தொற்று பாதிப்பை விட மீட்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 38 ஆயிரத்து 949 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் கோரப்பிடியில் இருந்து 40 ஆயிரத்து 26 பேர் மீண்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை நாட்டில் 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 876 பேர் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறார்கள்.

மீட்பு விகிதம் 97.28 சதவீதமாக உள்ளது.

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1,619 குறைந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 422 ஆக இருந்தது.

இது மொத்த பாதிப்பில் வெறும் 1.39 சதவீதம்தான் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story