கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா இல்லை - எடியூரப்பா விளக்கம்


கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா இல்லை - எடியூரப்பா விளக்கம்
x
தினத்தந்தி 17 July 2021 8:15 AM GMT (Updated: 17 July 2021 8:15 AM GMT)

கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா இல்லை என எடியூரப்பா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு 

கர்நாடக பா.ஜ.க.வில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவனி தலையீடு அதிகமாக உள்ளதாக கூறி சில மந்திரிகள்  மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் கட்சியிலும் அரசாங்கத்திலும் தனது மகன்களுக்கான முக்கியமான பதவிகளுக்காக எடியூரப்பா தொடர்ந்து லாபி செய்து வருவதாக பா.ஜ.க. டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு முடிவடைந்த நிலையில், எம்.பி.யாக இருக்கும் பி.ஒய் ராகவேந்திராவுக்கு கட்சியில் முக்கிய பதவி கோரப்படுகிறது. இதற்கிடையில்,எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் மற்றொரு மகன் விஜயேந்திரரை கர்நாடக அரசில்  துணை முதல்வராக்குமாறு  கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனி விமானத்தில் மகன்களான பி.ஒய் விஜயேந்திரா மற்றும் ராகவேந்திரா  ஆகியோருடன் எடியூரப்பா டெல்லி  சென்றார். அங்கு எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக எடியூரப்பா விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. உடல் நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருந்தாலும் இது குறித்து பிரதமர் மோடி விரைவில் இறுதி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால்  பி.எஸ்.எடியூரப்பா தனது ராஜினாமா குறித்த ஊகங்களை மறுத்து உள்ளார். தலைமை  என்னை ராஜினாமா செய்ய சொல்லும் போது நான் அதை செய்வேன். பின்னர், நான் மாநில நலனுக்காக உழைப்பதில் ஈடுபடுவேன். என் முடிவில் இருந்து எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர், மேலும் எனது திறமைகளுக்கு  ஏற்றவாறு பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என கூறினார்.

Next Story