‘கோர்ட்டுகளில் 4½ கோடி வழக்குகள் நிலுவை என்பது மிகைப்படுத்திய தகவல்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


‘கோர்ட்டுகளில் 4½ கோடி வழக்குகள் நிலுவை என்பது மிகைப்படுத்திய தகவல்’ - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 17 July 2021 7:58 PM GMT (Updated: 2021-07-18T01:28:47+05:30)

இந்திய கோர்ட்டுகளில் 4½ கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

புதுடெல்லி,

இந்தியா, சிங்கப்பூர் மத்தியஸ்த உச்சி மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு, ‘மத்தியஸ்தத்தை உருவாக்குதல்: இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து பிரதிபலிப்புகள்’ என்ற தலைப்பில் முக்கிய உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல ஆசிய நாடுகள் சிக்கலான பிரச்சினைகளுக்கு கூட்டு மற்றும் இணக்கமான தீ்ர்வு காணும் நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.

மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது உண்மையில் ஒரு மோதலுக்கு தீர்வு காண்பதற்கான கருவியாக மத்தியஸ்தம் செய்வதற்கான ஆரம்ப உதாரணமாக அமைந்துள்ளது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் கிருஷ்ணர் மத்தியஸ்தம் செய்வதற்கு முயற்சித்தார். மத்தியஸ்தம் செய்வதில் தோல்வி ஏற்படுகிறபோது அது பேரழிவு ஏற்படுத்தும் விளைவுகளுக்கு வழிவகுத்து விடுகிறது.

மத்தியஸ்தம் செய்வது என்பது ஒரு கருத்தாக, இந்திய நெறிமுறைகளில் ஆழமாக பொதிந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எத்தனையோ விதமான மத்தியஸ்த வடிவங்கள் இங்கே நடைமுறையில் இருந்துள்ளன. சர்ச்சைகள் ஏற்படுகிறபோது அவற்றுக்கு பெரியவர்களும், சமூக தலைவர்களும் தீர்வு கண்டுள்ளனர்.

1775-ம் ஆண்டு ஆங்கிலேய நீதி முறைமை உருவானது. அப்போது இந்தியாவில் சமூக அடிப்படையிலான தீர்வு காணும்முறை செல்லரிக்கத்தொடங்கியது. இறுதியில் ஆங்கிலேய நீதி முறைமையானது, இந்தியாவில் தற்போதைய நீதி முறைமைக்கான பொருத்தமான மாற்றங்களுடன் கட்டமைப்பாக மாறி உள்ளது.

மாற்றுமுறை தீர்வு வழிமுறைகளுக்கு புத்துயிர் அளித்த காரணிகளும் இங்கே உள்ளன. அவற்றில் ஒன்று, நீதி வழங்குவதில் ஏற்படுகிற தாமதத்துடன் தொடர்பு உடையது ஆகும்.

இந்திய கோர்ட்டுகளில் 4½ கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. வழக்குகள் குவிந்து கிடப்பதை நீதித்துறையால் சமாளிக்க முடிவதில்லை என்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இது மிகைப்படுத்தல் ஆகும். இது கருணையற்ற பகுப்பாய்வும் ஆகும்.

தீ்ர்த்து வைக்கப்படாத அனைத்து வழக்குகளையும் நிலுவை என்று கூறி விடுகிறார்கள். ஆனால் நீதிமுறைமையில் இந்த வழக்குகள் எவ்வளவு காலம் இருந்து வந்திருக்கின்றன என்பது பற்றி கூறப்படுவதில்லை. நேற்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் கூட நிலுவைகள் பட்டியலில் சேர்ந்து விடுகிறது. எனவே நீதிமுறைமை அமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது அல்லது மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இது பயனுள்ள அடையாளம் ஆகாது.

நீதித்துறையில் ஏற்படுகிற தாமதம், சிக்கலான பிரச்சினை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story