அக்டோபர் 1-ந்தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்


அக்டோபர் 1-ந்தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 17 July 2021 8:33 PM GMT (Updated: 17 July 2021 8:33 PM GMT)

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் அக்டோபர் 1-ந்தேதி முதல் நடத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் 2-வது அலை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கடந்த 2020-21-ம் கல்வியாண்டுக்கான பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதைப்போல புதிய கல்வி ஆண்டுக்காக கல்வி நிறுவனங்களை திறந்து செயல்படும் வாய்ப்பும் தள்ளிப்போகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

எனினும் கொரோனாவின் 2-வது அலை தற்போது நாடு முழுவதும் தணிந்து வருகிறது. இதனால் மாநிலங்கள் அமல்படுத்தியிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இவ்வாறு இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புவதால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை திறக்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி, இந்த கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை, திறப்பு தேதி உள்ளிட்டவை அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யு.ஜி.சி. நேற்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும்.

புதிய கல்வி ஆண்டின் இளங்கலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். அதேநேரம் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து கல்வி வாரியங்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.

அனைத்து கல்வி வாரியங்களின் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அனைத்தும் ஜூலை 31-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டால், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் வகுப்புகள் அக்டோபர் 18-ந்தேதி முதல் தொடங்கும்.

கல்லூரி, பல்கலைக்கழக வகுப்புகளை ஆன்லைன், நேரடி வகுப்புகள் அல்லது இரண்டும் கலந்து என்ற முறையில்தான் தொடர வேண்டும்.

கொரோனா தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் தேவையான நெறிமுறைகளை பின்பற்றி, அக்டோபர் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாணவர்களின் வகுப்புகள், இடைவேளைகள், தேர்வுகள், செமஸ்டர் விடுமுறைகளை கல்வி நிறுவனங்கள் திட்டமிட வேண்டும்.

கொரோனாவால் மாணவர்களின் பெற்றோர் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சேர்க்கை ரத்து, இடமாறுதல் போன்ற நடவடிக்கைகளின்போது, மொத்த கட்டணத்தையும் திரும்ப அளிக்க வேண்டும்.

2020-21-ம் கல்வி ஆண்டுக்கான இறுதி ஆண்டு தேர்வு அல்லது இறுதி பருவத்தேர்வுகளை ஆன்லைன், நேரடி முறை அல்லது இரண்டும் முறையிலுமாக ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

Next Story