ஆறுமுகசாமி ஆணைய விசாரணை: தமிழக அரசின் இடையீட்டு மனு மீது 20-ந்தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


ஆறுமுகசாமி ஆணைய விசாரணை: தமிழக அரசின் இடையீட்டு மனு மீது 20-ந்தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 9:13 PM GMT (Updated: 2021-07-18T02:43:53+05:30)

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் இடையீட்டு மனு ஜூலை 20-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்துவந்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தடை விதிக்க மறுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பல்லோ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் கடந்த 2019, ஏப்ரல் 26-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த தடை உத்தரவை ரத்து செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 10-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததுடன், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கக் கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே கடந்த 15-ந்தேதி ஆஜராகி, தமிழக அரசின் இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அதை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசின் இடையீட்டு மனுவை ஜூலை 20-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

Next Story