பரபரப்பான அரசியல் சூழலில் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு - 1 மணி நேரம் ஆலோசனை


பரபரப்பான அரசியல் சூழலில் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு - 1 மணி நேரம் ஆலோசனை
x
தினத்தந்தி 17 July 2021 9:54 PM GMT (Updated: 2021-07-18T03:24:40+05:30)

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

மத்தியில் ராணுவ, விவசாய மந்திரியாகவும், மராட்டியத்தில் பல முறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். மராட்டியத்தில் தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை ஓரம்கட்டி விட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைய வித்திட்டவர் இவர் தான்.

இந்த நிலையில் சரத்பவார் நேற்று திடீரென டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

பின்னர் இதுகுறித்து சரத்பவார் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, நாட்டின் நலன் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்” என்று பதிவிட்டார்.

இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. சரத்பவாரை அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3 முறை சந்தித்து பேசியிருந்தார். இவர்களின் ஆலோசனை 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டமிடல் என்று கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் சரத்பவார் 8 எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு கூட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் இதில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியிருந்தார். மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை களமிறக்க தி்ட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை வலுவிழக்க செய்யும் வகையில் சரத்பவாரை மோடி அழைத்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் மராட்டியத்தில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கூட்டணி கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவரான நானா படோலே விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற விறுவிறுப்பும் நிலவுகிறது.

இதற்கு மத்தியில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. மேற்கண்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி- சரத்பவார் சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரை சரத்பவார் சந்தித்து பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாட்டின் பல்வேறு பிரச்சினை குறித்து பிரதமருடன் சரத்பவார் பேசியுள்ளார். குறிப்பாக வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்தால் கூட்டுறவு துறைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமரிடம் பேசியதோடு, அது தொடர்பான மனுவையும் சரத்பவார் அளித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

சரத்பவாரை டெல்லியில் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுவதில் உண்மையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story