காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு!


காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில்  கர்நாடகா மனு!
x
தினத்தந்தி 19 July 2021 1:04 PM GMT (Updated: 19 July 2021 1:04 PM GMT)

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தும் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டமாகும்.

புதுடெல்லி

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தும் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, வருகிற உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி வருகிற தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட வழி பிறக்கும்.

முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலப்பரப்பும், இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலப்பரப்பும், மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலப்பரப்பும் நீர்ப்பாசன வசதியைப் பெறும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, கடலில் வினாடிக்கு சுமார் 6,300 கன அடி நீர் கடலில் கலக்கும். அது, இனி மேற்சொன்ன மாவட்டங்களின் நீர்ப்பாசன தேவைக்கும், குடிநீர் வசதிக்கும் பயன்படும் என்பது சிறப்பு.

முதல் கட்ட திட்டத்துக்காக 118.45 கி.மீ. நீளத்துக்கு கட்டளை கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட திட்டத்துக்காக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் உருவாக்கி, வைகையுடன் இணைக்கப்படும்.

மூன்றாம் கட்ட திட்டத்துக்காக 34 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில்,  காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.  கால்வாய் வெட்டுவதற்கான பணிகளை அப்போதைய முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

Next Story