சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா


சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 19 July 2021 4:02 PM GMT (Updated: 19 July 2021 4:02 PM GMT)

சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன  பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக  ஒட்டுகேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து  ஊடகங்கள்  சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு மக்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மத்திய நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி தலையிட்டு அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் எனவும் எதிர்க்கட்சியினர் தங்களது அமளிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து  நாடாளுமறத்தில் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது;-

ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் உண்மையல்ல. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. மென்பொருள் நிறுவனமே எந்தெந்த நாடுகளில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறு என திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்நிலையில், சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

"சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் தடங்கல் உண்டாக்குபவர்களின் சதித் திட்டத்தால் நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம்புரளச் செய்ய முடியாது. மழைக்காலக் கூட்டத் தொடர் முன்னேற்றத்துக்கான புதிய பலன்களைத் தரவுள்ளது.

நிகழ்வுகளின் உண்மைத்தன்மை மற்றும் தொடர்ச்சிகளையும் ஒட்டுமொத்த நாடு கவனிக்க வேண்டும். இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்றார்போல நேற்றிரவு ஒரு அறிக்கை வெளியானது. உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காக மட்டுமே சில குழுக்களால் அது பெரிதாக்கப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடர் மீது மக்களுக்கு நிறைய நம்பிக்கைகள் உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பினரின் நலனுக்காக முக்கிய மசோதாக்கள் மீதான விவாதங்கள் காத்திருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்பு பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. நாட்டின் முன்னேற்றத்தை தடம்புரளச் செய்வதுதான் அவர்களுக்கு எப்போதுமே விருப்பம்.

நாடாளுமன்றத்தில் முன்னேற்றுத்துக்கான எது வந்தாலும், அதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாது சீர்குலைக்க நினைப்பவர்கள் உலகளாவிய அமைப்புகள். இந்தியா முன்னேறிவிடக் கூடாது என தடங்கள் உண்டாக்குபவர்கள் நாட்டின் அரசியல்வாதிகள். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சிகளையும், தொடர்புகளையும் நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

நாட்டு நலனுக்குதான் முன்னுரிமை என்பதில் மோடி அரசு தெளிவாக இருப்பதை மக்களிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். என்ன நடந்தாலும் அந்த இலக்கை நோக்கி செயல்பட்டுக்கொண்டே இருப்போம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story