உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்


உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்
x
தினத்தந்தி 19 July 2021 4:37 PM GMT (Updated: 2021-07-19T22:07:39+05:30)

உடுப்பி அருகே ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கிறிஸ்தவ தொழில் அதிபர் கட்டிக்கொடுத்துள்ளார்.

கோவில் கட்டிய கிறிஸ்தவர்
உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். 

அதுபற்றிய விவரம் வருமாறு:-

உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (வயது 77). இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன்பு கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தை கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்து இருந்தனர்.

ரூ.2 கோடி செலவில்....
இந்த நிலையில் தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுக்காக...
இதுகுறித்து கேபிரியல் கூறும்போது, நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்கு சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Next Story