45 நாடுகள் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? பாஜக கேள்வி

45 நாடுகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன என்று முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
இஸ்ரேல் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் மந்திரிகள், நீதிபதி, தொழிலதிபர்கள் உள்பட 300 பேரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில், ராகுல்காந்தி பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பெகாசஸ்’ மென்பொருளை இஸ்ரேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்றிருப்பதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இந்தியாவில் மத்திய அரசுதான் செல்போன் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது.
அதாவது தங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மேற்கத்திய நாடுகள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அந்தவகையில் 45- நாடுகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன? இந்தக் கட்டுக்கதையின் திருப்புமுனை என்ன?
இதுவரை பாஜக மீது குற்றம் சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு எதிராக ஒரு ஆதாரத்தைக் கூட கொடுக்கவில்லை. இப்போது எழுந்துள்ள ஒட்டுக்கேட்பு புகார் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிக்கும் முயற்சியே” என்றார்.
Related Tags :
Next Story