இஸ்ரேல் மென்பொருள் உளவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்


இஸ்ரேல் மென்பொருள் உளவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 20 July 2021 12:12 AM GMT (Updated: 20 July 2021 12:12 AM GMT)

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா வலியறுத்தி உள்ளது.

மும்பை, 

இஸ்ரேல் மென்பொருள் மூலம் மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா வலியறுத்தி உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் மத்திய அரசு 2 மத்திய மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள், நீதிபதி, தொழில் அதிபர்கள், சமூக ஆா்வலர்கள் என சுமார் 300 செல்போன் உரையாடல்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது. குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதேபோல உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையான வலுவான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்தநிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் டெல்லியில் கூறியதாவது:-

இது நாட்டின் அரசும், நிர்வாகமும் வலுவில்லாமல் இருப்பதை காட்டுகிறது. மக்கள் இடையே ஒருவித அச்ச உணர்வு நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர், உள்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும்.

மராட்டியத்திலும் போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் நானா படோலே எழுப்பி உள்ளார். அதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் (பெகாசஸ் உளவு அமைப்பு) வெளிநாட்டு நிறுவனம் போன்களை ஒட்டு கேட்டு உள்ளது. குறிப்பாக பத்திரிகையாளர்களின் போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளன. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் போன் ஒட்டுகேட்கப்பட்டு இருந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்.

ஓவைசி வலியுறுத்தல்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது, 'பெகாசஸ் மென்பொருள் பயன்பாடு சட்டப்பூர்வ ஒட்டுகேட்பு அல்ல. தனிநபர்கள் செய்திருந்தாலும் அல்லது அரசு செய்திருந்தாலும் அது குற்றமாகும். மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தின் சேவை பெறப்பட்டதா என அரசு தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.


Next Story