சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு: ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு: ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 20 July 2021 3:00 AM GMT (Updated: 2021-07-20T08:30:12+05:30)

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் முறையாக டெல்லி சென்றார்.

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து அவரது 2-வது டெல்லி பயணம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பயணமாக அமைந்தது. ஜனாதிபதியை சந்திப்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார்.

அவருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் சென்றனர். நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தமிழக அரசின் பொய்கை இல்லத்தில் முதல்-அமைச்சர் தங்கினார்.

பின்னர் நேற்று பகல் 12 மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் சென்றார். ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சுமார் கால்மணி நேரம் பேசினார். அப்போது, மனோகர் தேவதாஸ் எழுதிய “மல்டிபிள் பேஸ்ட்ஸ் ஆப் மை மதுரை’ என்ற நூலை ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு ஜனாதிபதியை முதல் முறையாக சந்திப்பதற்காக வந்தேன். அவரைச் சந்தித்த நேரத்தில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு எனக்கு அவர் வாழ்த்துகளைச் சொன்னார்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12-1-1921 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திடவேண்டும் என்று ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

அந்த விழாவில், தலைவர் கருணாநிதியினுடைய உருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்கவேண்டும் என்ற அந்த செய்தியையும் சொல்லி இருக்கிறோம்.

அதையொட்டி, மதுரையில் தலைவர் கருணாநிதியின் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமையவிருக்கக்கூடிய அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமைய விருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வேறு ஏதாவது கோரிக்கைகள் வைக்கப்பட்டதா? 7 பேர் விடுதலை, நீட் தேர்வு குறித்து...

பதில்:- இல்லை அதைப்பற்றி பேசவில்லை. 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை, நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. உங்களுக்கு தெரியும். சட்டப்படி அதை நீதிமன்றத்தின் மூலமாகத்தான் நாடவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, தொடர்ந்து தி.மு.க. குரல் கொடுக்கும்.

கேள்வி:- மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி பிரதமரைச் சந்தித்து இருக்கிறார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். நீங்களும் பிரதமரைச் சந்தித்து இருக்கிறீர்கள், அடுத்தது ஜனாதிபதியை இது தொடர்பாக சந்திக்கலாம் என்ற நிலையில்....

பதில்:- ஏற்கனவே மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது அந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து, எங்களுடைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழு டெல்லிக்கு வந்து மத்திய ஜல்சக்தித் துறை மந்திரியை சந்தித்து அப்பிரச்சினை குறித்து விவாதித்திருக்கிறது. ஜல்சக்தித் துறை மந்திரியும் நிச்சயமாக அதற்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார். எனவே அது அந்த நிலையில் இருக்கிறது.

கேள்வி:- கொரோனா 3-வது அலை குறித்தும், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும்...

பதில்:- 3-வது அலைவரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு முனைப்போடு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, அது குறித்து நிச்சயமாக விவாதித்து, பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துபேசி, அதற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.

கேள்வி:- பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி 2 நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் கண்டிப்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணை கட்டியே தீருவோம் என்று கூறியிருப்பது குறித்து.

பதில்:- எங்களுக்கு பிரதமர் நம்பிக்கையோடு உறுதி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஜல்சக்தித் துறை மந்திரியும் உறுதி கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது இருக்கிறது. எனவே நாங்கள் அதைச் சட்டப்படி சந்திப்போம்.

கேள்வி:- ஒருவேளை கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா?

பதில்:- பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று எங்களுடைய அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதுதான் செய்தி.

கேள்வி:- கர்நாடகம் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களும் கலந்து ஆலோசிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதற்கு இப்போது அவசியம் இல்லை.

கேள்வி:- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன மாதிரி நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு...

பதில்:- ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி என்னென்ன விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று விவாதித்து இருக்கிறோம். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை குழு தலைவரும், மாநிலங்களவை குழு தலைவரும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சொல்லி அந்த அடிப்படையில் பேச இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story