கொரோனா இரண்டாவது அலையில் 80 சதவீத புதிய பாதிப்புகளுக்கு டெல்டா வைரஸ் காரணம்


கொரோனா இரண்டாவது அலையில் 80 சதவீத புதிய பாதிப்புகளுக்கு டெல்டா வைரஸ் காரணம்
x
தினத்தந்தி 20 July 2021 3:22 AM GMT (Updated: 20 July 2021 3:22 AM GMT)

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில் 80 சதவீத புதிய பாதிப்புகளுக்கு உருமாறிய டெல்டா வைரஸ்தான் காரணம் என்று மத்திய அரசு நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா மரபணுவியல் தொடர்பான மத்திய அரசின் நிபுணர் குழு இணை தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியிருப்பதாவது:-

புதுடெல்லி, 

டெல்டா வைரஸ் எனப்படும் உருமாறிய கொரோனா, முதல்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர்் மாதம் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டில் கொரோனா 2-வது அலை உருவானதற்கு இதுதான் முக்கிய காரணம்.

தற்போது, 80 சதவீத புதிய பாதிப்புகளுக்கு டெல்டா வைரஸ்தான் காரணம். முந்தைய உருமாறிய கொரோனாவான ஆல்பாவை விட இது 40 முதல் 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது.

இந்த வைரஸ், மராட்டியத்தில் இருந்து வடக்கு நோக்கி சென்று, மேற்கு மாநிலங்கள் வழியாக பரவி, மத்திய மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் பரவி விட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட 80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பரவி விட்டது.

டெல்டா வைரஸ், மற்ற உருமாறிய கொரோனாக்களை விட கடுமையான நோய் பாதிப்பை உண்டாக்குமா என்பது பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், டெல்டா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவை.

டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா, மராட்டியம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம் உள்பட 11 மாநிலங்களில் சுமார் 60 பேருக்கு தாக்கி உள்ளது. ஜப்பான், நேபாளம், போர்்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் பரவி விட்டது.

டெல்டா பிளஸ் வைரஸின் பரவும் வேகம், தீவிரம், தடுப்பூசிக்கு கட்டுப்படும் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு நடந்து வருகிறது. புதிய உருமாறிய கொரோனாக்கள் உருவாகும்போது, பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலமும் மூன்றாவது அலை வராமல் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story