கடந்த 3 மாதங்களில் மிகக்குறைந்த அளவாக கொரோனா பலி எண்ணிக்கை 500-க்கு கீழே வந்தது


கடந்த 3 மாதங்களில் மிகக்குறைந்த அளவாக கொரோனா பலி எண்ணிக்கை 500-க்கு கீழே வந்தது
x
தினத்தந்தி 20 July 2021 4:04 AM GMT (Updated: 20 July 2021 4:04 AM GMT)

கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கொரோனா தினசரி பலி எண்ணிக்கை 500-க்கு கீழே வந்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் தணிந்து வருகிறது. கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில்தான் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உளளது.

இந்தநிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 38 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய நாளில் 41 ஆயிரத்து 157 பேருக்கும், கடந்த சனிக்கிழமை 38 ஆயிரத்து 79 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. எனவே, தினசரி பாதிப்பு நிலவரத்தில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை 19 லட்சத்து 36 ஆயிரம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 லட்சத்து 63 ஆயிரத்து 593 மாதிரிகளில்தான் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்தான், 38 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், கொரோனா மொத்த பாதிப்பு 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.61 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.08 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 28 நாட்களாக இது 3 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. 3 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர். இது, மொத்த பாதிப்பில் 97.32 சதவீதம் ஆகும்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையில் 995 குறைந்துள்ளது. தற்போது, 4 லட்சத்து 21 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது, மொத்த பாதிப்பில் 1.35 சதவீதம்.

கொரோனா விவகாரத்தில் நல்ல திருப்பமாக, 24 மணி நேரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-க்கு கீழே வந்துள்ளது. முந்தைய நாளில் 518 பேர் பலியான நிலையில், நேற்று இது 499 ஆக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இதுதான் மிகக்குறைந்த பலி எண்ணிக்கை ஆகும். உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.

மராட்டியத்தில் 180 பேரும், கேரளாவில் 81 பேரும் பலியானார்கள். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 31 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story