காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு திடீர் மனு


காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு திடீர் மனு
x
தினத்தந்தி 20 July 2021 4:51 AM GMT (Updated: 20 July 2021 4:51 AM GMT)

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கும், தமிழகத்தில் காவிரியின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள கதவணை திட்டங்களுக்கும் நிரந்தர தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தும் திட்டம் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வீணாகும் உபரி நீரை விவசாய பாசனத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இருந்தபோதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல்கட்ட பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசின் சார்பில் வக்கீல் வி.என்.ரகுபதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காவிரியின் 45 டி.எம்.சி. உபரி நீரை மடை மாற்றுவதற்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் கர்நாடகம் பாதிக்கப்படும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, மத்திய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நீரின் அளவை விட தமிழக அரசு உரிமை கொண்டாட முடியாது என உத்தரவிட வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட மத்திய அரசாணைக்கு முரணாக தமிழக அரசு எவ்வித திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

பிலிகுண்டுலு வரையிலான காவிரி படுகையின் 45 டி.எம்.சி.க்கும் அதிகமான உபரி நீரின் உரிமையை கர்நாடகாவுக்கு அளித்து உத்தரவிட வேண்டும். பிலிகுண்டுலு வரையிலான 284.75 டிஎம்.சி நீரையும், 483-க்கும் மேலுள்ள டிஎம்சி உபரி நீரையும் கர்நாடகா காவிரி நீர் என அறிவிக்க வேண்டும். காவிரி நீரை பயன்படுத்தி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழகத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

மேட்டூர்-சரபங்கா நீரேற்ற திட்டம், மாயனூரில் புதுகட்டளை அணை திட்டம், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் குறுக்கு ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களில் திட்டமிட்டுள்ள அணை மதகுகள் திட்டம், கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் திட்டமிட்டுள்ள கதவணை திட்டம், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கருப்பூர் மாதிரிவேளூர் இடையேயான கதவணை திட்டம், அரியலூர் மாவட்டம் தூத்தூர் கதவணை திட்டம், கரூர் மாவட்டம் நேரூர் கதவணை திட்டம், குளித்தலை-முசிறி கதவணை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story