ஜே.இ.இ. 3-ம் கட்ட தேர்வுகள்; நாடு முழுவதும் இன்று தொடக்கம்


ஜே.இ.இ. 3-ம் கட்ட தேர்வுகள்; நாடு முழுவதும் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 20 July 2021 5:25 AM GMT (Updated: 20 July 2021 5:25 AM GMT)

நாடு முழுவதும் ஜே.இ.இ. 3-ம் கட்ட முதன்மைத் தேர்வு இன்று தொடங்கியது.

புதுடெல்லி,

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமையின் சார்பில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஜே.இ.இ. 3-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் கொரோனா 2-வது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் ஜூலை மாதம் 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஜே.இ.இ. 3-ம் கட்ட நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியது. வெளிநாடுகள் உட்பட 334 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 7 லட்சத்து 9 ஆயிரத்து 519 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை உட்பட 15 நகரங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. 

கணினி வழித்தேர்வாக நடைபெறும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்கள் ஹால் டிக்கெட்டுடன் தேர்வில் பங்கேற்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், மாணவர்களுக்கு மாஸ்க், சானிடைசர்கள் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story