பெகாசஸ் உளவு விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 20 July 2021 5:40 AM GMT (Updated: 20 July 2021 5:40 AM GMT)

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதை அமித்ஷா மறுத்துள்ளார்.

புதுடெல்லி

இஸ்ரேல் நாட்டில் ‘என்.எஸ்.ஓ.’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள், ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் ஊடுருவி, அவற்றில் இருந்து குறுஞ்செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை எடுக்கவும், செல்போன் பேச்சை பதிவு செய்யவும், மைக்குகளை ரகசியமாக இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் கைவசம் இருந்த 50 ஆயிரம் செல்போன் எண்களை பாரீசில் உள்ள ‘பார்பிட்டன் ஸ்டோரிஸ்’ என்ற நிறுவனமும், மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலும் ரகசியமாக பெற்றுள்ளன. அந்த எண்களை 16 செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளன.

அவற்றில் 15 ஆயிரம் எண்கள், மெக்சிகோ நாட்டை சேர்ந்தவை. மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ், ஹங்கேரி, இந்தியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான், பிரான்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை சேர்ந்த செல்போன் எண்களும் உள்ளன.

அந்த எண்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள், உளவு பார்க்க தேர்வு செய்யப்பட்ட 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600-க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் அடங்குவர்.

அவர்களது செல்போன்களில் உளவு மென்பொருளை ஊடுருவி உளவு பார்த்து விட்டார்களா? அல்லது உளவு பார்க்க முயற்சி நடந்ததா? என்று தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிதை சேர்ந்த ‘கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை அளித்தார்.அதில்  எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதை அமித்ஷா மறுத்துள்ளார். சதித்திட்டங்களால், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை சீர்குலைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில்  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அவர்கள் பெகாசஸ் பிரச்சினையை இரு அவைகளிலும் எழுப்ப முடிவு செய்தன

இதுகுறித்து மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது:-

இந்த (பெகாசஸ்) பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம் ... தேசத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை, அவர்கள் தான் (பா.ஜ.க.) அதைத் தடுத்துள்ளனர். அவர்கள் செஸ் விதித்தல், எரிபொருள் விலையை உயர்த்துவது, திட்டங்களுக்கு பணத்தை வீணடிப்பதன் மூலம் கோடிகணக்கான்  பணம் சம்பாதித்துள்ளனர்.

கொரோனா  குறித்த விளக்கக்காட்சியை வழங்க விரும்பினால், அதை மத்திய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தனித்தனியாக கொடுக்க வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார்.

Next Story