தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகரிப்பு; ராஜ்ய சபையில் தி.மு.க., அ.தி.மு.க. வலியுறுத்தல்


தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகரிப்பு; ராஜ்ய சபையில் தி.மு.க., அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2021 11:35 AM GMT (Updated: 2021-07-20T17:05:25+05:30)

தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகரித்து உள்ளது பற்றி ராஜ்ய சபையில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.


புதுடெல்லி,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.  நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.  உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன.  இதேபோன்று குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

எனினும், நாட்டில் கொரோனா 3வது அலை பரவ கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதனை முன்னிட்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுவதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்னடைவு ஏற்படுவதாக சுகாதார துறை தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று கூறும்போது, தமிழகத்திற்கு 12 கோடி கொரோனா தடுப்பூசி தேவை. ஆனால் இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது. தினமும் 7 லட்சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன.

ஆனால் தினமும் 4 முதல் 5 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைக்கிறது.  அரசு வேண்டுமென்றே தட்டுப்பாடு என்று கூறவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகம். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார்கள்.

எனவே, மத்திய அரசு 10 கோடி தடுப்பூசியை விரைவாக தந்தால் 4 முதல் 5 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது என கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவையில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தமிழகத்தின் தடுப்பூசி பிரச்னை குறித்து பேசினார்கள்.

எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், செங்கல்பட்டு தடுப்பூசி மையம் திறக்கப்பட வேண்டும்.  3வது அலை வருவதற்கு முன் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதேபோன்று எம்.பி. தம்பிதுரை பேசுகையில், செங்கல்பட்டு தடுப்பூசி மையம் திறக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்று கூறியுள்ளார்.


Next Story