எடியூரப்பாவுக்கு கவர்னர் பதவி வழங்கப்படுகிறதா?


எடியூரப்பாவுக்கு கவர்னர் பதவி வழங்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 20 July 2021 9:11 PM GMT (Updated: 2021-07-21T02:41:08+05:30)

எடியூரப்பாவை சமாதானப்படுத்த அவரது மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்று வருகிற 26-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து கடந்த 16-ந் தேதி டெல்லிக்கு சென்ற எடியூரப்பா அங்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அவர்கள், எடியூரப்பாவிடம் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுமாறு கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை எடியூரப்பா முற்றிலுமாக மறுத்தார். ஆயினும், எடியூரப்பா பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பேசியதாக வெளியான ஆடியோ உரையாடலில், எடியூரப்பா பதவி விலக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வது உறுதி என்றே கூறப்படுகிறது. இதனால் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எடியூரப்பாவை சமாதானப்படுத்த அவரது மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது பா.ஜனதா மாநில துணைத்தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் எடியூரப்பா ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. மக்களின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக திகழும் எடியூரப்பாவின் தேவை பா.ஜனதாவுக்கு அவசியம் தேவைப்படுவதாகவும், அவர் இல்லாவிட்டால் பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதனால் எடியூரப்பாவுக்கு அடுத்ததாக என்ன பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.


Next Story