கொரோனாவை கையாள ரூ.40 ஆயிரம் கோடி - மக்களவையில் மந்திரி தகவல்


கொரோனாவை கையாள ரூ.40 ஆயிரம் கோடி - மக்களவையில் மந்திரி தகவல்
x
தினத்தந்தி 21 July 2021 4:13 AM GMT (Updated: 2021-07-21T11:58:55+05:30)

இந்தியாவில் கொரோனாவை கையாள்வதற்கு, சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மந்திரி நித்யானந்த் ராய் வெளியிட்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் திலீப் சாய்கியாவும், ரமேஷ் சந்தர் கவுசிக்கும் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறி இருந்த முக்கிய தகவல்கள் வருமாறு:-

* இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பட்ட நிதி போக, கூடுதலாக அனுமதிக்கப்பட்ட நிதி ஆகும்.

* 2019-20 ஆண்டில் ரூ.1,113 கோடியே 21 லட்சம், கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. இது சாதாரணமாக தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் விடுவிப்பதை விட அதிகம் ஆகும்.

* கொரோனா அவசர கால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார் நிலை தொகுப்பு நிதியாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. இந்த நிதி கொரோனாவை தடுக்கவும், தொற்றை கண்டுபிடிக்கவும், பதிலளிக்கவும் நோக்கமாகக்கொண்டு வழங்கப்பட்டது.

* இது போக, கொரோனா அவசர கால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார் நிலை தொகுப்பு இரண்டாவது கட்ட நிதியாக ரூ.23 ஆயிரத்து 123 கோடி செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பங்கு ரூ.15 ஆயிரம் கோடி. மாநிலங்களின் பங்களிப்பு ரூ.8,123 கோடி ஆகும். இது நடப்பு ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் ஆகும்.

இதைக் கொண்டு கிராமப்புறங்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும், மருந்துகள் இருப்பு வைப்பதற்கும், கொரோனா தடுப்பில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புக்கும், தொலைதொடர்பு மருத்துவ கலந்தாலோசனை வசதிக்கும், கொரோனா சிகிச்சையில் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story