இந்தியாவில் 125 நாளில் மிகக்குறைவாக கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு தொற்று


இந்தியாவில் 125 நாளில் மிகக்குறைவாக கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 July 2021 4:40 AM GMT (Updated: 21 July 2021 4:40 AM GMT)

இந்தியாவில் 125 நாளில் மிகக்குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையை வீழ்த்தும் வெற்றிப்பயணம் தொடர்ந்து நடந்து கொண்ருக்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 30 ஆயிரத்து 93 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இது 125 நாளில் மிகக்குறைந்த தினசரி பாதிப்பு ஆகும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி 28 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. அதன்பிறகு இப்போதுதான் மிகக்குறைந்த பாதிப்பு பதிவாகி உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் 17 லட்சத்து 92 ஆயிரத்து 336 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் நாட்டில் 44 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 133 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் என்பது நேற்று 1.68 சதவீதம் ஆகும். இது தொடர்ந்து 29-வது நாளாக 3 சதவீதத்துக்குள் பதிவாகி உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 2.06 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியாகிறவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 500-க்கும் கீழாக (499) வந்தது. நேற்று இது மேலும் சரிந்து 400-க்கும் கீழே வந்தது. 24 மணி நேரத்தில் 374 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர். இது 111 நாளில் மிகக்குறைந்த இறப்பு எண்ணிக்கை ஆகும்.

இதுவரை இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 482 ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.33 சதவீதமாக தொடர்கிறது.

நேற்று மராட்டியத்தில் 66 பேரும், கேரளாவில் 58 பேரும் இறந்தனர்.

நேற்று கொரோனாவால் ஒருவர்கூட இறக்காத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சிக்கிம், புதுச்சேரி, மத்திய பிரதேசம், லட்சத்தீவு, லடாக், இமாசலபிரதேசம், குஜராத், கோவா, தத்ராநகர் ஹவேலி டாமன் டையு, சண்டிகார், அந்தமான் நிகோபார் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

நேற்று கொரோனா தொற்றின் பிடியில் இருந்து 45 ஆயிரத்து 254 பேர் குணம் அடைந்தனர். இதுவரை நாட்டில் மொத்தம் 3 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 710 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 97.37 சதவீதம் ஆகும்.

நேற்று கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 535 குறைந்தது.

இதனால் காலை 8 மணி நிலவரப்படி சிசிக்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்து 130 ஆக குறைந்தது. இது 117 நாளில் மிகக்குறைந்த பாதிப்பும், மொத்த பாதிப்பில் 1.30 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story