கேரளாவில் வார இறுதி ஊரடங்கு தொடரும் - கேரள மாநில அரசு அறிவிப்பு

கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
பக்ரீத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள் ஊரடங்கு தளர்வுகளை கடந்த சனிக்கிழமை கேரள அரசு அறிவித்தது. அதன்படி கொரோனா பாதித்த மூன்று மண்டலங்களில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மிக அதிக பாதிப்பு உள்ள ஒரு பகுதியில், ஒரு நாள் மட்டும் கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதில் வணிகர்களின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சியூட்டும் விவகாரம் என்றும், இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி ஊரடங்கை திரும்பப் பெற அரசு நேற்று முடிவு செய்திருந்த நிலையில் விதிவிலக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story